யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கம் மீளவும் புத்தெழுச்சி

மொழி பண்பாடு தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதுடன் அதன் தொடக்க நிகழ்வு 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.தொடக்க நிகழ்வில் சங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கெனத் தற்காலிக நிர்வாகக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். தமிழ்ச் சங்கம் தலைவராக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, துணைத் தலைவர்களாக சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செயலாளர்களாக தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் அதிவண. சு.ஜெபநேசன், பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, கலாநிதி க. குணராசா அதாவது (செங்கை ஆழியான்), இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் உதவிப் பணிப்பாளர் சிவ.மகாலிங்கம் ஆகியோரும் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேலும் தெரிவு செய்யப்ட்டுள்ளனர்.

உப செயலாளர்களாக, கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், யாழ். மத்திய கல்லூரி ஆசிரியர் நாக. தமிழிந்திரன் ஆகியோரும் பொருளாளராக யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பியும் செயற்படவுள்ளனர். இருபத்தைந்து பேரைக் கொண்ட ஆட்சிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1900 ஆம் ஆண்டில் தமிழ்ப் புலவர்கள் யாழ்ப்பாணத்தில் மலிந்திருந்த காலகட்டத்தில் த. கைலாசபிள்ளை, யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினார்.

கொக்குவில் சி.சபாரத்தின முதலியார், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, வட்டுக்கோட்டை ஆறுமுக உபாத்தியாயர், ஊரெழு சு.சரவணமுத்துப் புலவர், நல்லூர் வே. கனகசபாபதி ஐயர் முதலியோர் இச்சங்கத்தில் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், கிளிநொச்சி செயலக கலசார உத்தியோகத்தர் கு.றஜீபன், புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் வண. ம.ஜெறோ செல்வநாயகம், திருநெல்வேலி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ந.விஜயசுந்தரம் உள்ளிட்ட பலர் கருத்துக்களை முன்வைத்தனர்.

சங்கத்தில் புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஆயுட்சந்தாவாக மூவாயிரம் ரூபாவையோ ஆண்டுச் சந்தாவாக இருநூற்றைம்பது ரூபாவையோ செலுத்துவதன் மூலம் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சங்கத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தெரிவித்தார்.

Related Posts