யாழ்தேவிக்கான முற்பதிவுகள் செயலிழப்பு

தொழில்நுட்ப இணைப்பிலுள்ள பிரச்சினையால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில் முற்பதிவு நடவடிக்கைகள், செயலிழந்துள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

yarldevi

யாழிலிருந்து கொழும்பிற்கு இன்று செவ்வாய்க்கிழமை (14) மாலை, முதலாவது புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அந்த ரயிலில் பயணத்தை மேற்கொள்வதற்காக பயணிகள் முற்பதிவு செய்ய யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு சென்றவேளை முற்பதிவு நடவடிக்கைகள் இன்னமும் செயற்படத் தொடங்கவில்லையென அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் அங்கு நின்றிருந்த புகையிரத நிலைய அலுவலரிடம் கேட்டபோது, தமது முறைமைகளை செயற்படுவதற்கான தொழில்நுட்ப இணைப்புக்கள் இணைக்கப்படாததால் முற்பதிவு பணிகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன், பளை ரயில் நிலையத்திலும் முற்பதிவு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால், இன்று மாலை பயணமாகும் ரயிலில் பயணம் செய்வோர், ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ரயில் நிலையம் வந்து உடனடியாக கட்டணம் செலுத்தி பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று அவ்வலுவலர் தெரிவித்தார்.