யாழில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இந்நாள் வரையில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாதத்தில் நேற்று 22ஆம் திகதி வரை 142.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதியப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கிடைத்த 81.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை விட அதிகமாக இருப்பினும், 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கிடைத்த மழைவீழ்ச்சியை விட குறைவானதாக காணப்படுகிறது.

2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 395.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 301.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் கடந்த வருடம் (2013) முழுவதும் 784.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதியப்பட்டுள்ளது. இந்த வருடம் இன்று வரை 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதியப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் காலங்களில் கூடுதலான மழை வீழச்சி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.