யாழில் ரஞ்சித்தேவசிறி! போராட்டம் தொடரும் என சூளுரை!

இன்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனைத்துப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் தேவசிறி விஜயம் செய்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.தமது போராட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்தொடரும் எனவும் சூளுரைத்துள்ளார்!

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தனது ஆதரவினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதகாலமாக தொடரும் நாடுதழுவிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் செயலிழந்து மாணவர்களின் கல்வி கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் அரசாங்கமோ விரிவுரையாளர்களோ விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாரற்ற நிலையில் தமது நிலையில் விடாப்பிடியாக இருக்கின்றனர்.

இருதரப்பின் கொள்கைகள் மீது விமர்சனங்களை வைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருந்தும் மாணவர்கள் அவர்கள் அனைவரிற்கும் இடையில் என்ன நடக்கும் என்று உய்த்தறிய முடியாத நிலையில் அங்கலாய்த்தவண்ணம் உள்ளனர்.

வேலைக்கு திரும்பும் விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை வழங்குவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளமையால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைக்கு திரும்புவரென உயர் கல்வியமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

அமைச்சின் முன்மொழிவை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளபோதிலும், சிலர் மனம் மாறி வேலைக்கு வந்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிடுமெனவும் அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் ஜயந்த நவரட்ன கூறினார்.

இத்தொழிற்சங்க நடவடிக்கையில் அரசியல் தொடர்பிருப்பதாகவும் இந்தளவில் அவர்களின் 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மல்வத்த மற்றும் அஸ்கிரியபீட மகாநாயக்கர்களின் இணக்க முயற்சிகளை தாம் ஆதரிப்பதாகவும் ஏனைய முயற்சிகள் தோல்வியடையின் மகாநாயர்களுடன் பேசுவதற்கு திகதி குறிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் செலவை அதிகரிக்கவும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கென விசேட கல்விச்சேவையொன்றை உருவாக்கவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் முன்மொழிவுகள் தெளிவில்லாமலிருப்பதாகவும் இவை தமது கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லையெனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

 

Related Posts