யாழில் மண் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு புதிய அனுமதிப் பத்திரங்கள்!

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் மண் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச்செய்து புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க விண்ணப்பங்களைக் கோருமாறு சுற்றாடல் மற்றும் மீள்சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த உத்தரவிட்டுள்ளார்.

சுற்றாடல் பாதிப்பு விடயங்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அதிகாரிகளுக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

மணல் மற்றும் மண் விற்பனையில் ஈடுபடும் அனுமதிப்பத்திரம் உள்ள உரிமையாளர்களால் வடமராட்சி கிழக்கு, மண்கும்பான், அரியாலை, பூநகரி உட்பட்ட பிரதேசங்களில் மணல் அகழவானது சூழலைப் பாதிக்கும் விதத்தில் நடைபெறுவதாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து தற்போது பயன்பாட்டிலுள்ள சகல அனுமதிப் பத்திரங்களையும் susil-peremajeyanthaரத்துச் செய்யுமாறு அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் போது நிபந்தனைகளும் வெளியிடப்பட்டு, அவ் நிபந்தனைகளுக்கு உட்பட்டே அனுமதிகள் வழங்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த உத்தரவிட்டுள்ளார்.

திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சரால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மணல் மூலம் பெறப்படுகின்ற நிதியில் ஒரு பகுதி சம்பந்தப்பட்ட பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படும் நிதியானது மணல் அகழ்வுப் பகுதிகளின் மரம் நடுகைக்கும், மணல் அள்ளச்செல்லும் போது குறித்த பகுதியின் பாதைகள் பழுதடைதலைச் சீர்செய்வதற்கு குறித்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மத்திய அமைச்சின் சுற்றாடல் பராமரிப்புடன் தொடர்புடைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts