Ad Widget

யாழில் புதிய சிறைச்சாலை திறந்துவைப்பு

‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’ என்ற தொனிப்பொருளின் கீழ் சிறைக்கைதிகளை உரிமைகள் மற்றும் சலுகைகளுடன் தடுத்து வைப்பதற்கு உகந்த சுற்றாடலுடனும் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண புதிய சிறைச்சாலை கட்டடத்தொகுதி சனிக்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

A new prison complex

யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேரா தலைமையில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, சிறைச்சாலைக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்.

யாழ். பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்துக்கான அடிக்கல்லை, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வின்போது, தேசியகொடி மற்றும் சிறைச்சாலைக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டன. அதன் பின்னர் சிறைச்சாலைக்கான நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, சிறைச்சாலைகள் ஆணையாளர், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர்கள், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளங்செழியன், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகன், ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.கஜநிதிபாலன், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், உட்பட பொலிஸ் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts