யாழ். மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணபட்டிருந்த சிலர் கடந்த ஒரு சில தினங்களில் கடத்தப்பட்டும், காணாமல்போயுமிருப்பதாக தெரியவருகின்றது.கடந்த சில வருடங்களாக மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய குழுக்கள் பொலிஸாரினதும், படைத்தரப்பினதும் ஆதரவுடன் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது.
இவர்கள் பின்னர் பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட நபர்களை தாக்குவது, வெட்டுவது போன்ற அடியாள் வேலையினையும் மேற்கொண்டு வந்திருந்தனர். இவ்வாறான குழுக்களின் செயற்பாட்டின் உச்சமாக யாழ்.நகரிலும், திருநெல்வேலியிலும் இருவேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் வாள்வெட்டுக்கும் இலக்காகினர். மேலும் இந்த தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் சினிமா பாணியில் இடம்பெற்றிருந்தன.
எனினும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவோ, சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. இதேபோல் இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் 20வயது தொடக்கம் 25வயதிற்குட்பட்டவர்கள்.
அவர்களை பொது மக்களுக்கும் கூட அடையாளம் தெரிந்த நிலையில் தாதாக்கள் போல் எந்த தங்குதடையுமின்றி இவர்கள் நகரத்தில் நடமாடி வருகின்றனர். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையேற்றிருந்த இந்திரன் என்ற அதிகாரி, இவர்களை கண்டதும் சுடுவதற்கான நீதிமன்ற உத்தரவினை யாழ். நீதிமன்றில் பெற்றிருந்தார்.
அந்த உத்தரவினைப் பெற்று அடுத்த சில நாட்களில் அந்த பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றமும் வந்து சேர்ந்தது. இதனால் 9 ரவுடிகள் தப்பித்துக் கொண்டனர். அதில் பலர் இந்த சம்பவத்தின் பின்னர் குடும்பங்களுடன் சேர்ந்து அமைதியான வாழ்வுக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால் சிலர் முன்னர் இருந்ததை விட மிக மோசமாக மாறிவிட்டனர்.
இந்நிலையிலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் வைத்து செம்பாட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடத்தப்பட்டிருக்கின்றார். இதேபோல் யாழ். நகரப் பகுதியில் புகைரதப் பாதையில் குடியிருக்கும் பகுதியிலிருந்த சிலரும் காணாமல் போயிருக்கின்றனர்.
எனினும் இவர்கள் எங்கே, என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளபோதும், மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் இந்தச் சம்பவம் நடக்கவேண்டியது என்ற எண்ணமே மேலோங்கியிருக்கின்றது.