யாழில் செபக்கூடமாக மாறிய யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி

co-op_buildingயாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி கிறிஸ்தவ அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட கூட்டுறவாளர்களின் கல்வி பயிற்சி, தகவல் மேம்பாட்டினை நோக்கங்களாக கொண்டு அமைக்கப்பட்ட கூட்டுறவுக் கல்லூரியே இவ்வாறு செபக்கூடமாக மாறியுள்ளது.

2006 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இக்கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவுப் பணியாளர்களுக்கான உயர்தரம், சாதாரண தரம், கனிஸ்ட தரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

கடந்த யுத்த காலத்தில் இடமாற்றப்பட்டு 2008 ஆம் ஆண்டு முதல் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையின் கட்டத்தில் ஒரு பகுதியில் இக்கூட்டுறவுக் கல்லூரி இயங்கி வருகின்றது.

தற்போது சமாதான சூழல் ஏற்பட்ட பின்னர் அனைத்து நிறுவனங்களும் பழைய இடங்களில் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், போதிய கட்டிட நிர்மாண வசதிகளுடன் கற்பித்தல் சூழலுக்கு ஏற்ப இருக்கும் குறித்த கூட்டுறவுக் கல்லூரியும் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என்பது கூட்டுறவாளர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது.

ஆனால் உரிய நிர்வாகத்தால் கூட்டுறவுக் கல்லூரி மீளவும் ஆரம்பிக்கப்படாமல் கிறிஸ்தவ அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியினை மீள ஆரம்பிப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் உரிய திணைக்களம் அக்கறையுடன் செயற்பட்டு குறித்த மாவட்ட கூட்டுறவுக் கல்லூரியை மீண்டும் மிடுக்குடன் செயற்பட வழி அமைக்க வேண்டும் என கூட்டுறவாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor