யாழில் சட்டவிரோத காணி அபகரிப்பில் இராணுவம்: த.தே.கூ

tnaசட்டத்திற்கு முரணான வகையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் காணி அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், அப்பாத்துரை விநாயமூர்த்தி மற்றும் வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்,

‘யாழ். மாவட்டத்தில் இதுவரை 27 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் உள்ளனர். இதில் வலிகாமம் வடக்கில் 24 கிராம அலுவலர் பிரிவிலும் வலிகாமம் கிழக்கில் 3 கிராம அலுவலர் பிரிவிலும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யவேண்டியுள்ளது.

இந்த நிலையில் வலிகாமம் வடக்கில் விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் சட்டத்திற்கு முரணான வகையில் இராணுவத்தினரால் காணி அபரிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்பு பணிகளுக்கு பொதுமக்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அவர்களுக்குரிய நட்டஈடு மற்றும் மாற்றிடங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இராணுத் தளபதி எதேச்சையாக அபகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார். அந்த அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது?’ என்றார்.

Recommended For You

About the Author: Editor