அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அமெரிக்க விமானப் படை மருத்துவக் குழுவின் மருத்துவ முகாமில் 2500 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுள்ளதாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் நடைபெற்ற இறுதிநாள் மருத்துவ முகாமில் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.
இந்த மருத்துவ முகாம் அச்சுவேலி – இடைக்காடு மகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு 4 தினங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர் குழுவுடன் இலங்கை விமான மற்றும் கடற்படை மருத்துவக் குழு மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவர்களும் இச்சேவையின்போது இணைந்து செயற்பட்டனர்.
பொது மருத்துவம், கண், பல், உடற்கூற்றியல் மற்றும் குடும்பநல மருத்துவ சேவைகள் ஆறு நாட்களாக இலவசமாக பொதுமக்களிற்கு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது