இறுதியுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் சரணடைவோரை பாதுகாக்குமாறு ஜெனீவா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளிடம் உதவிகோரியபோது எவரும் உதவி வழங்க முன்வரவில்லை என அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் தொடர்பில் முழுப்பொறுப்பையும் பசில் ராஜபக்சவே ஏற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் மீது உண்மையான பற்றிருந்தால் அதனை இறுதிப்போரின்போது வெளிக்காட்டியிருக்கலாம். உண்மையிலேயே ஜெனீவாவுக்கு தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவர்களின் எதிர்பார்ப்பு இல்லை. மாறாக மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
இறுதி யுத்தத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது நல்லாட்சி பதவிக்கு வந்ததும் ஜெனீவாவின் அழுத்தம் குறைந்துவிட்டது.
இது உண்மை என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஏனென்றால் உண்மையான நிலைப்பாடுகளை வைத்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.
உண்மையிலேயே அவர்களின் நோக்கம் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தவேண்டுமென்பதே. தமிழ் மக்களுக்கோ பாதிக்கப்பட்ட மக்களுக்கோ நீதி கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்திலோ இந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.
இறுதி யுத்தத்தின்போது மோதலில் ஈடுபடும் இரண்டு சாராரைத் தவிர ஏனைய சாதாரண மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கையை ஜெனீவாவிற்கும், வேறு சர்வதேசஅமைப்புகளுக்கும் விடுத்திருந்தோம்.
எனவே, அதனை அவர்கள் ஏற்கவுமில்லை, உதவிசெய்ய முன்வரவுமில்லை. அந்த மக்கள் மீது பற்றும் இருக்கவில்லை.
அத்துடன், இந்த அழுத்தங்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகவே பயன்படுத்தினர். தற்போது அந்த அழுத்தங்களை குறைத்துள்ளனர்.
அந்த அழுத்தங்கள் இல்லாமல் போனமைக்கான காரணம் என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைத்துவிட்டதா? இன்று பேச்சும் இல்லை, மூச்சும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தேவையானவிடயம் நடந்தேறியிருக்கிறது. யுத்தம் என்பது எந்த நேரமும் மரணம், துக்கம் நிறைந்ததாகும். தமிழ் மக்களுக்குஅநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு நீதி கிடைக்கச்செய்ய வேண்டும்.
துப்பாக்கி மூலம் மா இடிக்க முடியாது, மாறாக சூடுகளையே வழங்கமுடியும். அவ்வாறு செய்தால் பாதிப்பே ஏற்படும். உண்மையிலேயே பாதிப்பு ஏற்பட்டதாக அறிந்தால் நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.