முல்லையில் குடும்பமொன்று உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தந்தை,தாய்,பிள்ளைகளென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று (வியாழக்கிழமை) காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.

family-mullai-1

தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் ஒரு பக்கச் சார்பாக செயற்படுவதாக தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் 1983ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருவதாகவும், தமது காணியை பிறிதொரு நபர் உரிமை கோரி வந்த நிலையில் காணிபிணக்கு 7 வருடமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கும் குறித்த குடும்பத்தினர், இன்று வரை தமக்கான நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

குறித்த காணி விடயம் தொடர்பில் தமக்கெதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர் தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த காணிக்கான காணி உரிமத்தினை எதிர் தர்பினருக்கு வழங்கலாம் என மாகாண காணி ஆணையாளர் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமக்குரிய நீதி கிடைக்கும் வரையில் தாம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும், அரசியல்வாதிகளும் வருகை தரும் பட்சத்தில்லேயே தமது போராட்டம் கைவிடப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பம் தெரிவிக்கின்றது,

family-mullai-2

மேலும், தாம் 7 வருடமாக எவ்வித பாதுகாப்புமற்ற தற்காலிக கொட்டகையிலேயே வசித்து வருவதாகவும், தமக்கு மலசல கூடம், வீட்டு திட்டம் உட்பட எவ்வித அரச உதவிகளையும் கிராம சேவையாளர் தருவதில்லை எனவும் குறித்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், நீதிமன்று ஒன்றில் வழக்கொன்று இடம்பெற்று கொண்டிருக்கையில், அரச அதிகாரிகள் பக்க சார்பாக செயற்படுகன்றமை பக்க சார்பான செயற்பாடாகவே தாம் கருதுவதாகவும், இதற்கு அரச உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எம்மை போன்று வேறு எவரும் பாதிக்கப்படாதவாறு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதே வேளை கடந்த 23ஆம் திகதி அதே பகுதியில் யுத்தத்தின் போது கணவனை இழந்தும் 2 பிள்ளைகளை பறிகொடுத்தும் வாழ்ந்து வரும் தாயார் ஒருவர் உரிமை கோரும் காணியில் விளையாட்டு மைதானத்திற்கான காணி அலுவலர் மற்றும் கிராம சேவையாளரினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த காணியும் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஆகியன தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்து வந்த நிலையிலும், காணியின் ஒரு பகுதியில் மாவட்ட நீதிமன்றில் 206.15 இலக்கத்தில் சிவில் வழக்கொன்று இடம்பெற்று வரும் நிலையிலும் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இவ்வாறு காணி அலுவலர் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் தமது அதிகார போக்கின் நிமித்தம் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கி வருகின்றமை தொடர்பில் கல்வியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor