முன்னேஸ்வரம் ஆலய மிருகப் பலி விவகாரம்! வேறு சமய குழுக்கள் தலையிட வேண்டாம்! அகில இலங்கை இந்து மாமன்றம்

இந்து ஆலயங்களில் மிருகப்பலி செய்ய வேண்டாமெனக் காலத்துக்குக் காலம் நாங்கள் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கின்றோம். இது எமது சமயத்திற்கு ஒவ்வாத, ஏற்றுக்கொள்ள முடியாத பாவச்செயல் எனச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம். என அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மனிதர்களுக்காக மிருகங்களையோ பட்சிகளையோ எந்த ஓர் உயிர் இனத்திற்கும் ஆலயத் திருத்தலத்திலோ சுற்றாடலிலோ கொடுமைசெய்வதை அனுமதிக்க முடியாது என அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது;

சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் 2012 செப்டம்பர் முதலாம் திகதி மிருகபலி நிகழ்வு இடம்பெற இருப்பதையறிந்து வேதனைப்படுகின்றோம்.

அதனைச் செய்யவேண்டாமென ஆலய நிர்வாகத்தினரையும், பூசகர்களையும் வேண்டுகின்றோம்.

அதேநேரம் அரசியல்வாதிகளையும், இந்து அல்லாத வேறு சமய குழுக்களையும் இதில் தலையிடவேண்டாமென வேண்டுகின்றோம்.

மேலும், இதனை ஓர் அரசியல் பிரச்சினையாகவோ மதத்துவேச நிலைமையை ஏற்படுத்துகின்ற நிலைமையாகவோ மாற்ற வேண்டாம்.

இந்தப் பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை இந்துக்களிடமே விட்டுவிடுங்கள்.

வழிபாட்டுத் தலத்தில் சமூகம் சம்பந்தமான பிரச்சினைகள் அல்லது கேள்விகள் எழலாம். சமூக நம்பிக்கையின் அடிப்படையில் ஓர் நிகழ்வு இடம்பெறும் போது அதனை அந்தக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும்.

அதே நேரத்தில் சமூக விடயங்கள் சமய நம்பிக்கைகளுடன் கலக்கப்படக்கூடாது. எமது சமயத்தின் புனிதமான கோட்பாடுகளுக்கோ அல்லது வழிபாட்டுத் தலங்களின் புனிதத்திற்கோ அல்லது தெய்வீகத் தன்மைக்கோ எவரும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது.

இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.