முன்னாள் போராளிகள் உயிரிழப்பு: எதுவும் தெரியாது என்கிறார் ஆளுநர்

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் 107 பேர் உயிரிழந்தமை தொடர்பாக எனக்கு ஒரு தகவல்களும் தெரியாது.வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னதாகவே அறிந்தேன். எனக்கும் ஆதாரங்களுடன் தெரியப்படுத்தினால் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஆளுநரிடம் முன்னாள் போராளிகளின் தொடர் உயிரிழப்புக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய வட மாகாண ஆளுநர், மாகாண சபையில் மேற்படி விடயம் தொடர்பாக பேசப்பட்டபோதே எனக்கு அந்த விடயம் தெரியவந்தது. எனக்கு எவரும் அது தொடர்பாக தெரியப்படுத்தவில்லை. எனவே ஆதார பூர்வமாக எனக்கும் தெரியப்படுத்தப்படுகின்ற போது அது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல என்னால் முடியும்.

மேலும் வட மாகாண சபையில் இந்த விடயம் பேசப்பட்டுள்ளமையினால் அந்த விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்வதற்கும் வாய்ப்புள்ளது- என்றார்.

Related Posts