முன்னாள் தளபதி எழிலனின் மனைவி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கம்?

வடமாகாண தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

யாழ் மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டிற்கான தெரிவுக்கூட்டத்தின் அடிப்படையில் மொத்தமுள்ள 19 இடங்களில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 4 ஆசனங்களும், ரெலோவுக்கு 3 ஆசனங்களும், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழரசுக்கட்சியின் 7 ஆசனங்களில் ,திரு சி.வி.கே சிவஞானம்,குருநகர் பிரதேசத்தினை சேர்ந்த திரு ஆனோல்ட் ,எழிழனின் மனைவி ஆனந்தி, வடமராட்சியினைச்சேர்ந்த திருமதி சிவயோகம் ,தென்மராட்சியில் சட்டத்தரணி சயந்தன் ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றதாகவும் ஏனைய இரண்டு வேட்பாளர்கள் தெரிவில் இழுபறி நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.அந்த 2 இடங்களுக்கும் பேராசிரியர் சிவச்சந்திரன் ,தர்சானந்த்,கனகசபாபதி ,வித்தியாதரன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இருப்பினும் ஆரம்பத்தில் முதலமைச்சர் வேட்பாளராக பேசப்பட்ட முன்னாள் ஊடகவியலாளர் திரு வித்தியாதரன் சுட்டமைப்பின் தலைவரான சம்பந்தரின் தெரிவில் உள்ளார் இதனை முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் மறுக்கப்பட்ட மாவை சேனாதிராஜா அனுமதிப்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்சானந் பெயரும் நிராகரிக்கப்படவே வாய்ப்பு உள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு வழங்கப்பட்ட 4 ஆசனங்களில் யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் மற்றும் சூழலியலாளர் ஐங்கரநேசன் , மாதகலைச்சேர்ந்த மணியம்,சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்

ரெலோவில் சிவாஜிலிங்கம், மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்,வட்டுக்கோட்டையினைச்சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் களமிறங்குகின்றனர்

தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் சங்கையாவும் தலைவர் ஆனந்த சங்கரியும் களமிறங்க உத்தேசித்திருப்பதாக கூறப்படுகின்றது. தமிரசுக்கட்சியை சேர்ந்த கஜதீபன் புளாட்டிற்குரிய 2 ஆசனங்களில் ஒன்றை பெற்றுக்கொண்டு களமிறங்க உள்ளதாகவும் புளொட் தலைவர் சித்தார்த்தனும் இம்முறை வடமாகாணத்தேர்தலில் குதிக்க உள்ளதாகவும் தெரியவருகின்றது

எது எப்படியிருப்பினும் முன்னதாக கிடைத்த இந்த பெயர் விபரங்களிற்கு மாறாக வேட்பாளர்கள் இறுதி நேரத்தில் மாற்றப்படக்கூடிய ஏது நிலைகளும் காணப்படுகின்றன. கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சி செயலர் மாவைசேனாதிராஜாவே வேட்புமனுக்களை தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது இவ்வாறிருக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒதுங்கியுள்ள பொருளியல் ஆசான் வரதராஜன் உள்ளிட்ட பலர் வடமாகாண தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து வருகின்றனர் என எமது செய்திப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவனுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில் அவரது தெரிவுகள் எவையும் இம்முறை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று தெரியவருகின்றது.முன்னதாக மாவை சேனாதிராஜாவும் சுமந்திரனும் உதயன் பத்திரிகை குறித்து எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலமை தேர்தலில் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் விக்கினேஸ்வரனுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மகாணசபையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய பலமான வேட்பாளர் அணியை உருவாக்குவதற்கான வியூகத்தினை வகுப்பதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளுர் அணி கவனம்செலுத்துவதாக தெரியவருகின்றது.

இதேவேளை முல்லைத்தீவில் இலங்கை தமிழர_க் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் புளொட்டுக்கு தலா ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 3 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 3 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் ரெலோ 3, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு தலா 2 ஆசனங்களும் புளொட்டுக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் விபரம் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை

இன்று(20) வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெறுகிறது அதன்பின்னரே வேட்பாளர்தெரிவில் தமிழரசுக்கட்சியில் இறுதிமுடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.