வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை ஓமந்தையில் அமைக்க வலியுறுத்தியும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்து வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த பேரணியொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடிய விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன் மன்னார் வீதி வழியாக அமைதியான முறையில் பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்றிருந்தனர்.
இதன்போது முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், மத்திய அரசே ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமையவிடு போன்ற வாசகங்களை பதாதைகளில் எழுதியவாறு பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த பேரணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் ஆர். இந்திரராசா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியின் நிறைவில் வவுனியா மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் தி. திரேஸ்குமாரிடம் பிரதமர் மற்றும் முதலமைச்சரிடம் கையளிப்பதற்கான மகஜர் கையளிக்கப்பட்டதுடன் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.