Ad Widget

மாவீரர் நினைவாக மரங்களைப் போற்றுவோம் : வடக்கு விவசாய அமைச்சர்

தமிழினத்தின் விடுதலைக்காக உயிர் துறந்த உத்தமர்களின் நினைவாலயங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஆனால், நினைவுச் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனங்களில் இருந்து அவர்களது நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது. அவர்களின் நினைவாக மரங்களை நாட்டிப் போற்றுவோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினமான இன்று உயிர் ஈகம் செய்த போராளிகளை நினைவு கொள்ளும்முகமாக இத்தாவில் பகுதியில் பொதுமக்களால் இன்று வெள்ளிக்கிழமை மரநடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உயிர் துறந்தவர்களின் நினைவு நாட்களை அனுட்டிப்பது உறவுகளின் மரபார்ந்த உரிமை. அதுவும், எமது அரசியல் விடுதலைக்காக உயிர் துறந்தவர்களின் நினைவை அனுட்டிப்பது எங்கள் எல்லோரதும் கடமை. கூட்டுப் பிரார்த்தனைக்கு வலு அதிகம். அதுபோன்றுதான், வெவ்வேறு காலப்பகுதிகளில் உயிர் துறந்தவர்களின் நினைவையும் கூட்டாக அனுட்டிக்கும்போது அதற்குக் கிடைக்கும் வலு அதிகம்.அதனால்தான், அரசாங்கம் மாவீரர் தினத்தைக் கொண்டாட முடியாது என்று தடைவிதிக்கிறது. இந்தத் தடைகளுக்குப் பயந்து பணிவோமாக இருந்தால், நாம் தொடர்ந்தும் அடுத்தவர்களுக்கு அடிபணிந்தவர்களாகவே எப்போதும் வாழ நேரிடும்.
நாம் எவருமே இன்னுமொரு யுத்தத்தை விரும்பவில்லை. இதுவரையில் நாம் கொடுத்த உயிர்ப்பலிகள் போதும். எமது இளைய தலைமுறை மீண்டும் ஒருபோதும் வன்முறைப் பாதைக்குத் திரும்பக்கூடாது. ஆனால், அவ்வாறு நேர்ந்து விடுமோ என்று இப்போது அஞ்ச வேண்டி உள்ளது. அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் அலட்சியம் காரணமாக ஒரு மாணவன் அநியாயமாகத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டிருப்பது சாதாரண ஒரு விடயமல்ல. அரசாங்கம் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்து தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதைத் தவிர்த்து தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நினைவாக மரங்களை நடுகை செய்யும் நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், இ.ஆர்னல்ட், பா.கஜதீபன் ஆகியோரும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts