மாற்றுவலுவுள்ளோர் கொடுப்பனவை குடாநாட்டில் பெறுபவர்கள் குறைவு

logo-handicapsசமூக சேவைகள் அமைச்சினால், மாற்று வலுவுள்ளோருக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ்.மாவட்டத்திலிருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அக்கறை எடுக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக சேவைகள் அமைச்சுக்கு யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலிருந்தே குறைவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதை சமூக சேவைகள் அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

சமூக சேவைகள் அமைச்சினால் இலங்கையிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் மாற்று வலுவுள்ளோருக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

இது வரையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் 34 பேருக்கு வழங்கப்பட்ட மாதாந்தக் கொடுப்பனவு தற்போது 50 பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்க்கு அமைவாக மாற்று வலுவுள்ளோருக்கு மேற்படி கொடுப்பனவைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்.மாவட்டத்திலிருந்து இதற்குரிய விண்ணப்பங்கள் அமைச்சுக்கு அதிகளவில் கிடைக்கவில்லை எனவும், மாற்று வலுவுள்ளோர் பெருமளவானோர் யாழ்.மாவட்டத்திலுள்ள போதும் இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு அரச அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும், இதனால் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்.மாவட்டத்திலிருந்து குறைந்தளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே மாற்று வலுவுடையவர்களை இனங்கண்டு அரச அதிகாரிகள் அவர்களை உரிய முறையில் விண்ணப்பிக்கச் செய்து சமூக சேவைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.