Ad Widget

மாற்றுத் தொழிலுக்கு நடவடிக்கை – பா.டெனீஸ்வரன்

வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இழுவை படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், சட்டரீதியான மாற்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

deneeswaran

வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இழுவை படகுகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், தங்களின் இழுவை படகு தொழிலுக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று தொழில் நடவடிக்கையை ஏற்படுத்தி தருமாறு கோரியும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை திங்கட்கிழமை (06) முன்னெடுத்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களின் இழுவை படகு தொழிலிற்கு அனுமதியளிக்க வேண்டும் அல்லது தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற விதமான நடவடிக்கையை எடுத்துத்தரும்படி மத்திய, வடமாகாண கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இது தொடர்பில் பா.டெனீஸ்வரன் கருத்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

மேற்படி மீனவர்களின் இழுவை படகு தொழிலிற்கு அனுமதி வழங்க முடியாது. ஆனால் அவர்கள் மாற்று தொழில் நடவடிக்கைக்கு எங்களிடம் கோரினால் மத்திய கடற்றொழில் அமைச்சுடன் கலந்துரையாடி அதற்கான ஏற்பாடுகளை செய்வோம். இருந்தும், அவர்கள் கோரும் மாற்று தொழில் நடவடிக்கை சட்டரீதியானதாக இருக்க வேண்டும் என கூறினார்.

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் இழுவைப் படகு மீன்பிடியுள்ளதாக மேற்படி மீனவர்கள் கூறியிருந்தனர். ஆனால் அப்பகுதியில் மறைமுகமாக இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் இருக்கலாம்.

ஆனால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அந்தந்த மாவட்டங்களிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் மூலம் மேற்கொண்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்., சுழிபுரம், காட்டுப்புலம் திருவடிநிலை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு மீனவர்கள் அனுமதிக்காமை தொடர்பில் கடற்படையினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை வடமாகாண மீன்பிடி அமைச்சு மேற்கொள்ளவுள்ளதாகவும் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 9ஆம் திகதி வடமாகாண சபை அமர்வு முடிவடைந்த பின்னர், அன்று மாலை மீன்பிடி அமைச்சு சார்ந்த அதிகாரிகள், வடமாகாண மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள குழு, அந்த பிரதேச பிரதேச செயலாளர் ஆகியோருடன் சென்று கடற்படையினருடன் கலந்துரையாடவுள்ளோம்.

கலந்துரையாடலில், அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை மீண்டும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்ற ரீதியில் கதைக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி பகுதியில் 120 மீனவர்கள் குடும்பங்கள் எவ்வித மீன்பிடி உபகரணங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மேற்படி பகுதியில் கடற்படை முகாம் அமைக்கப்படவிருப்பதால், அப்பகுதியில் மீன்பிடிக்க வேண்டாம் என கடற்படை மீனவர்களுக்கு தடை விதித்தனர்.

மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குடியேறிய மேற்படி குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்திற்கான வீடுகள் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts