Ad Widget

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வட மாகாண சபை பாடுபடும்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வட மாகாண சபை தொடர்ந்தும் பாடுபடும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொடிய யுத்தம் விட்டுச்சென்ற வடுக்களில் மிகமோசமானது பலருக்கு வலுவிழப்பை ஏற்படுத்தியமையாகும். துப்பாக்கி பிரயோகம், எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல், நிலக்கண்ணி என பலவழிகளிலும் காயப்பட்டு தமது அவயவங்களை இழந்து மற்றவர்களில் தங்கிவாழும் விசேட தேவைக்குட்பட்டவர்களாக நம்மில் பலர் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டியது நமது கடமையாகும்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது வெறும் கொண்டாட்டமல்ல. தமது அடிப்படை தேவைகளுக்குகூட மற்றவர்களில் தங்கிவாழும் மாற்றுதிறனாளிகளின் நிலமை மிகமோசமானது. குறிப்பாக இந்நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் மூலம் விசேட தேவைக்குட்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள் பல வேதனைகளை அனுபவித்த வருகின்றார்கள்.

மாகாண புனர்வாழ்வு மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் என்ற வகையில் எமது அமைச்சினால் இவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.

நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகளை விட எமது மாகாணத்தில் அதிகமானவர்கள் இருந்துவருகின்றார்கள். இவர்களில் பலர் யுத்தத்தினால் விசேட தேவைக்குட்பட்டவர்களாக செயற்கையாக ஆக்கப்பட்டவர்கள். இவர்களில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டள்ளது. அதைவிட அவர்களுக்கான மாதாந்த உதவிக்கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

இவர்களுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட மலசலகூடங்கள் அமைப்பதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் வட மாகாணத்துக்கான விசேட புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts