மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாகவும், குடும்பங்களை இழந்து அனாதைகளாகவும், விதவைகளாகவும் வாழும் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

dane

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் ஒன்றியத்துக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை(9) இடம்பெற்றது.

இச்சந்திப்பு மன்னார், மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச் சங்கத்தில், வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்;

மாற்றாற்றல் உள்ளவர்களும் சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழ வழி செய்ய வேண்டும். எனக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களில் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், போக்குவரத்தின் போது பேரூந்துகளில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆசனங்களை வழங்கக்கூடிய வகையிலான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாற்றாற்றல் உள்ளவர்களை இனம் கண்டு அவர்களுக்கும் இச்சங்கத்தினூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் வட மாகாணத்தில் இயங்கும் 12 மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கங்களில், 09 சங்கங்களைச் சேர்ந்த பிரதி நிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts