மாநகர சபை தொண்டர்களுக்கு சேவைக்கால அடிப்படையில் நியமனம்

யாழ். மாநகர சபையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு சேவைக் கால அடிப்படையில் கல்வித் தகைமையின் இறுக்கம் தளர்த்தப்பட்டு நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கப்படுவார்கள் என மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று தெரிவித்துள்ளார்.

DSCF8971

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாநகர சபையில் 150 பணியாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இன்று திங்கட்கிழமை நேர்முகத்தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக பத்திரிகைகளில் மாநகர சபையினால் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சை சித்தி பெற்றவர்கள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே யாழ். மாநகர சபையில் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்திய மாநகர சபையின் தற்காலிக சுகாதாரத் தொண்டர்கள் தாங்களுக்கு இல்லாமல் வெளிநபருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கருதி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்தும் மாகாண ஆளுநரின் அதிகாரத்தின் மூலம் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் எதிர்பார்த்த கல்வித் தகைமையினை விட குறைந்த கல்வித்தகைமை உடையவர்களையும் உள்வாங்குவதாக தீர்மானித்திருந்தோம்.

ஆகவே இது தொடர்பாக அறிந்திராத சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர். எனினும் அவர்களுக்கு சேவைக் கால அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவினால் விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது” என்றார்.

எனினும் சுகாதாரத் தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று நடைபெறவிருந்த போதும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் பிறிதொரு நாளில் நேர்முகத் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.