மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து! இராஜதந்திரிகளிடம் முறையிட்டுள்ளோம்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் கூட்டு எதிரணியினர் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் முறையீடு செய்துள்ளனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து தங்கள் நாடுகளிடம் தெளிவுபடுத்துமாறு கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் கேட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

தங்கள் கரிசனைகளுக்கு இராஜதந்திரிகள் சிலர் சாதகமான பதில் அளித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையிலும், முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் கைதுசெய்யப்படுகின்ற நிலையிலுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

“நாட்டின் நீதித்துறை இன்று சுயாதீனமின்றி செயற்படுகின்றது. நாடாளுமன்ற அனுமதியின்றி வற் வரி அதிகரிக்கப்படுகின்றது. முன்பு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுதான் இது அமுலுக்கு வரும். இந்த அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தற்போதைய சூழலில் வைத்தால் அரசுக்குப் பாரிய தோல்வி ஏற்படும் என்ற காரணத்திற்காகவே தேர்தல் பிற்போடப்பட்டு வருகின்றது. ஆனால், இதனை நீண்டகாலம் காலதாமதப்படுத்த முடியாது. இந்த நல்லாட்சி அரசுக்குத் தோல்வி வெகுதொலைவில் இல்லை” – என்றார்.

Related Posts