மருத்துவ தாதிய சேவைக்கு 5ஆயிரம் பேர்

இலங்கையில் முதன்முறையாக மருத்துவ தாதியர் சேவைக்காக ஒரே தடவையில் 5 ஆயிரம் பேர் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான நிகழ்வுகள் நாளை காலை 10 மணிக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்திர் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தாதியர் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கும் ஒரே நோக்கில் நாடு முழுவதுமுள்ள 18 தாதியர் கல்வி வித்தியாலயமும் சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2010ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக மூவாயிரத்து 366 பேரும் 2012 இல் 2 ஆயிரத்து 239 பேரும் 2013இல் 2 ஆயிரத்து 823 பேரும் 2014 ஆம் ஆண்டிற்காக 2 ஆயிரத்து 535 பேரும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

நோயாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையை மேற்கொள்வதற்கு என அரசாங்கம் 2005ஆம் ஆண்டில் 15 ஆயிரமாகவிருந்த தாதியர்களின் எண்ணிக்கையினை 2014ஆம் ஆண்டிற்குள் 30 ஆயிரத்து 547 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

2017ஆம் ஆண்டில் மக்கள் சனத்தொகையின் ஒரு இலட்சம் பேருக்கு 160 தாதியர்கள் இருக்க வேண்டுமென்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.