வடமாகாணத்தில் மதுபோதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாதவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் விடுதியொன்று முதன் முதலாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படும் என்று உளநல மருத்துவ நிபுணர் சிவயோகன் தெரிவித்தார்.
வைத்தியசாலை பணியாளர்களுடனான நேற்றைய கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரின் வழிகாட்டலில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் சிவயோகனின் நெறிப்படுத்தலில் இந்த விடுதி இயங்கவுள்ளது.
இது விடுதியாக அல்லாது பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கக்கூடிய ஆற்றுப்படுத்தல் நிலையமாகவே செயற்படவுள்ளது.
யாழ். குடாநாட்டில் சந்தர்ப்ப வசத்தால் மதுபோதைக்கு அடிமையானவர்களே அதிகமானோர் என்பதாலும், அவர்களை நல்வழிப்படுத்துவது இலகுவான விடயம் எனக் கருதப்படுவதாலும் போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் தாமாக முன்வந்து வைத்திய நிபுணருடன் கலந்தாலோசித்து நிலையத்தில் தங்கலாம்.
இவ்வாறான நிலையங்கள் இலங்கையில் குருணாகல், கொழும்பு ஆகிய இடங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக இத்தகைய நிலைய மொன்றை அமைக்க சுகாதாரத் திணைக்களத்தினர் முன்வந்துள்ளமை பாராட்டக்கூடியது.
அத்துடன் இந்த வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பற்றாக்குறையான நிலையிலும் இங்கு பணியாற்றுவோர் மேலதிக நேரம் பணியாற்ற மனவிருப்பத்துடன் முன்வந்தமை சுகாதாரத் திணைக்களத்தினர் எடுத்த நடவடிக்கைக்கு உந்து சக்தியாக அமைகிறது.
இந்த முயற்சி வெற்றியளிக்குமாயின் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் இளவயதில் போதைக்கு அடிமையாகியுள்ள எமது மக்களின் இளையோர் இங்கு வந்து புனர்வாழ்வு பெற முடியும்.
வடபகுதியில் டெங்கு மற்றும் எயிட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட மதுபோதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியா திருப்போரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்” என உளநல வைத்திய நிபுணர் கருத்து வெளியிட்டுள்ளார்.