மண்டேலாவுக்கு இலங்கை அரசு செலுத்தும் அஞ்சலி போலியானது: மாவை

mavaiநெல்சன் மண்டேலாவுக்கான இலங்கை அரசின் அஞ்சலிகள் உலக நாடுகளுக்கு போலித்தனமான செயல் எனவும் ஒரு விசுவாசம் மிக்க அஞ்சலி இல்லை எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“மறைந்த தென்னாபிரிக்க முன்னாள் ஐனாதிபதி நெல்சன் மண்டேலா தனது இன மக்களுக்காக போராடிய ஒரு மாமனிதராவார். இப்போரட்டத்தினால் அவர் 27 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து ஒதுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட போதும் தன் மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடினார்.

ஆகவே தென்னாபிரிக்க போராட்டத்தினை நாம் பாடமாக எடுத்து எமது பிரச்சினைகளை இராஐதந்திர முறையில் முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு இவ்வளவு அழிவுகளை ஏற்படுத்திய அரசு தற்போது விடுதலைக்கு போராடிய தலைவனுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளது.

நெல்சன் மண்டேலாவின் போராட்டம் நமக்கு ஒரு பாடம். அதன் அனுபவம் நமக்கு தேவை. தென்னாபிரிக்காவில் பெரிய போராட்டத்தின் பின் ஓரு தீர்வு கிடைத்தது. நமக்கு இவ்வளவு அழிவிற்கு பின்பும் ஒரு தீர்வும் கிட்டவில்லை.

மூன்று இலட்சம் மக்களின் அழிவிற்கு பின்னும் ‘நாம் சொல்வதை நீங்கள் கேளுங்கள்’ என்ற அடக்குமுறைதான் இங்கு தற்போது காணப்படுகிறது. இதற்கிடையில் இலங்கை அரசு நெல்சன் மண்டேலாவுக்கான அஞ்சலி செலுத்த சென்றமை உலக நாடுகளுக்கு படம் காட்டும் செயலாகும்” என்றார்.