மக்கள் ஆணையை நிறைவேற்றுங்கள் – மதத் தலைவர்கள்

hindu-muslim-christianசுயநிர்ணய உரிமை, தேசியம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று சர்வமதத் தலைவர்கள் மாகாண சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் போதே சர்வ மதத் தலைவர்கள் இவ்வாறு கோரினர். நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்சிய சுவாமிகள் தனது உரையில், மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையைச் சரியான முறையில் பயன்படுத்தி, தமிழர்களுடைய வரலாறு மீண்டும் இந்த மண்ணில் சிறப்பாக எழுதப்பட வேண்டும் என்று கூறினார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை உரையற்று கையில்,இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். மக்கள் தமது அமோகமான வாக்குகளினால் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்துள்ளனர். நீங்கள் முரண்பாடு களை நீக்கி எதிர்ப்புகளை விடுத்து இணக்கமாக மக்கள் பணிகளைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

மெளலவி மஹமுத் சலாகி தனது உரையில், இன்று எப்படி ஒன்றுமையாக இருக்கிறீர்களோ அதேபோன்று பதவிக் காலம் முடியும் வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் யாரும் தலைவர்கள் அல்ல. மக்கள் சேவகர்கள். இதை நீங்கள் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். தலைமைக்கு கட்டுப்பட்டு நடவுங்கள் என்றார்.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா உரையாற்றுகையில்,நாங்கள் வரலாற்றில் பல பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றோம். தோல்விகளையும் எதிர்கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் வீழ்ந்துவிடவில்லை. எப்போதும் எழுந்து தான் நிற்போம் என்றே மக்கள் தீர்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

நாம் எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாத இரு விடயங்கள் உள்ளன. ஒன்று சுயநிர்ணய உரிமை மற்றையது தேசியம். இதனை அடிப்படையாக வைத்தே மக்கள் ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். இதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். வரலாற்றில் திருப்பு முனையான தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, எங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளை மறந்து செயற்பட வேண்டும் என்றார்.