மக்களுக்கு சேவையாற்ற பதவி தேவையில்லை – அனந்தி சசிதரன்

Ananthy - elilan”அனந்தி சசிதரன் ஆகிய நான் வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிக்களுக்காக அடிபடுவதாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் சில உள்நோக்கத்துடன் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படுகின்றது”. என அனந்தி சசிதரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.

அறிக்கையின் முழுமையான வடிவம்…

நடந்து முடிந்த வடமாகாண சபைத்தேர்தலில் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு அடுத்ததாக அதிகூடிய விருப்பு வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெறச்செய்த எனது உறவுகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
எத்தகையதொரு எதிர்பார்ப்புடன் நீங்கள் எனக்கு வாக்குகளை அளித்தீர்களோ அவ்வழித்தடத்திலிருந்தும் நான் இம்மியளவும் விலக மாட்டேன் என உறுதி கூறுகின்றேன்.

இந்நிலையில் ஒரு சில இணைய ஊடகங்களில் அனந்தி சசிதரன் ஆகிய நான் வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிக்களுக்காக அடிபடுவதாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் சில உள்நோக்கத்துடன் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படுகின்றது.

அத்தகைய திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை முற்றாக நிராகரிப்பதோடு எமது மக்களுக்கு சேவையாற்ற மாகாண சபை அமைச்சுப்பதவிகள் தான் தேவையானது எனவும் நான் ஒரு பொழுதும் கருதவில்லை.

யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் எமது மக்களுக்கு சேவை செய்வதற்கும் குரல் கொடுப்பதற்கும் மாகாண சபை உறுப்பினர் பதவி என்பது கூட தடைக்கல்லாக இருந்தால், அதனையும் தாண்டிச்செல்ல நான் தயாராகவே இருக்கின்றேன்.
தேர்தல் காலப்பகுதியில் என் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பொறிமுறையொன்றை உறுதி செய்து உதவுமாறு எனது கட்சித் தலைமையிடம் கேட்டுள்ளேன்.

அமைச்சுப்பதவிகள் போன்றவற்றிக்காக முரண்பட்டுக்கொள்வது, எந்த மக்கள் உன்னதமான இலக்கிற்காக எமக்கு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தார்களோ அந்த எமது உறவுகளையே சலித்து போக வைத்து எம்மை அம்மக்களிடமிருந்து அன்னியப்படுத்திவிடும்.

எனவே மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுப்பதவிகள் தான் வேண்டுமென்பதில்லை என்பதனை அனைவருக்கும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நடந்து முடிந்த தேர்தல் கால பகுதிகளில் பெண் என்ற வகையிலும் யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் தாயொருத்தி என்ற வகையிலும் எனது வெற்றிக்காக தோள் கொடுத்த மகளீர் அமைப்புக்கள் அனைத்திற்கும் மீண்டும் நன்றிகள். பெண்ணொருவரை அமைச்சர் ஆக்குவதன் ஊடாக தமக்காக குரல் கொடுக்கும் சக்தி ஒன்று தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள அக்கறையினை நான் நன்றியுடன் புரிந்து கொள்கின்றேன். அந்த வகையினிலேயே கூட்டமைப்பு தலைமையிடம் எனக்காக அமைச்சு ஒன்றை வழங்கியுதவுமாறு அவர்கள் கோரியிருக்கலாம் என நம்புகின்றேன்.
பதவிகள் மற்றும் கதிரைக்கனவுகளை தாண்டி எனது மக்களிற்கான சேவையென்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளேன் என்பதை மீண்டுமொரு முறை நான் உறுதிப்படுத்திக்கொள்கின்றேன்.

அன்புடன்

அனந்தி சசிதரன்
வட மாகாணசபை உறுப்பினர்
யாழ்ப்பாணம்
01.10.2013