Ad Widget

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது சகோதரர்களை விசாரியுங்கள்

முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது 5 சகோதரர்களிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் யார் கொலையைச் செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும். சகோதரர்களுடன் நான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால் இந்தவிடயம் தனக்குத் தெரியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மகேஸ்வரனின் சகோதரர்களுக்கும் அவரது மனைவி விஜயகலாவுக்கும் மகேஸ்வரனை யார் கொலை செய்தார் என்பது தெரியும். தமது வியாபார நோக்கத்துக்காகவும் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அவர்கள் அதனை வெளியிடமாட்டார்கள்.

மனைவி, என் மீதும் எனது கட்சி மீதும் வீண் பழி சுமத்துகின்றார். மகேஸ்வரனின் கொலைக்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் நீதி வழங்கப்படவில்லையென்றால், ஏன் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அதில் அங்கம் வகிக்கும் அவரது மனைவி நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாது.

கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்த ஆதரவை எனக்குத் தந்திருந்தால், சிறையிலிருந்த அனைத்து அரசியல் கைதிகளையும் தற்போது விடுவித்திருப்பேன்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், முன்னர் இருந்தது போல தனக்கு இணையான, அனுபவம் மிக்க ஒருவர் போல இணைத்தலைமையாக நியமிக்கப்படாமையாலேயே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இணைத்தலைமை பதவியில் இருந்து விலகினார் என நான் நினைக்கின்றேன் என தெரிவித்தார் .

Related Posts