போர் முடிவடைந்த பின்னரும் வடக்கில் பிரச்சினை தீரவில்லை – அமெரிக்கத் தூதுவர்

போர் முடிவடைந்த போதும் வடக்கில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் மக்கள் இப்போதும் உள்ளார்கள். இவ்வாறு தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன்.

amereca-michchel

நாகர்கோவிலில் நேற்று இடம்பெற்ற மீனவர்களுக்கு இயந்திரப் படகுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மீள்குடியேறிய நாகர்கோவில் கிழக்கு, மேற்குக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 40 இயந்திரப் படகுகள் 80 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் யு.எஸ். எயிட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் வழங்கும் திட்டத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று ஆரம்பித்து வைத்தார்.

நாகர்கோவில் பொது மண்டபத்தில் ச.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் மேலும் தெரிவித்ததாவது:

இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென நடத்திய கூட்டத்தில் மக்களுக்காக நாம் என்ன செய்கின்றோம் எதைச் செய்கிறோம் எனக் கேள்வயெழுப்பியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதியின் வேண்டுதலை இங்கே நிறைவேற்றியுள்ளோம்.

அழகான இடம் இது. அழகைப் போல மக்களின் வாழ்க்கை இல்லை. 2002 ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்க அணியோடு நானும் இங்கு வந்திருந்தேன். மோசமான பாதைகள் வழியே இங்கிருந்து சாவகச்சேரி ஊடாக மீசாலைக்குச் சென்று கண்ணிவெடி அகற்றுவதைப் பார்வையிட்டோம்.

முகமாலை முன் அரங்குக்குச் சென்று பார்வையிட்டோம். பின்னர் யாழ்ப்பாணம் சென்று யாழ். ஆயரையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியிருந்தோம். அந்நிகழ்வுகள் பசுமையானது. யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த மக்களையும் மற்றும் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், தந்தையர்களைச் சந்தித்ததை மறக்க முடியாது.

2009 ஆம் ஆண்டு போர் முடிந்தாலும், தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்து வருகின்றன. தொழில்கள் இல்லை. சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாத வகையில் மக்கள் உள்ளார்கள்.

கலவரங்களில் சிக்குண்ட மக்களுக்கு இது போன்ற தொழில் உதவிப்பணி முக்கியமானது. விவசாயிகள், மீனவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும்.

மக்கள் வீடு திரும்பும் நடவடிக்கைக்கு யு.எஸ்.எயிட் நிறுவனத்துடன் அரசு, சேவாலங்கா நிறுவனம் என்பன எம்முடன் இணைந்து பணியாற்றுகின்றன. சேவாலங்கா, யு.எஸ்.எயிட் என்பன மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையான திருப்பத்துக்கு உதவுகின்றன என்றார்.

நேற்றைய தினம் முதல் கட்டமாக 10 இயந்திரப்படகுகளை 20 மீனவர்களுக்கு அமெரிக்க தூதுவர் கையளித்தார். எஞ்சிய 30 இயந்திரப்படகுகள் 60 மீனவர்களுக்கு கடற் றொழிலாளர் சங்கம் மூலமாக அடுத்த வாரத்தில் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு மீனவர்களுக்கு ஒரு இயந்திரப்படகு என்ற அடிப்படையில் கூட்டுத் தொழில் புரியும் பொருட்டு இவை வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயந்திரப் படகும் 4.5 இலட்சம் ரூபா பெறுமதியானவையாகும். படகில் இணைக்கப்பட்டுள்ள வெளி இணைப்பு இயந்திரம் 9.9 குதிரைச் சக்தி கொண்டது.

யு.எஸ்.எயிட் நிறுவனப் பணிப்பாளர் சொரி.எப்.கார்ளின் அம்மையார், மனிதாபிமான மற்றும் நல்லாட்சிக்கான நிகழ்ச்சிப் பணிப்பாளர், ட்ரெலர், யு.எஸ்.எயிட் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.அச்சுதன், வடமாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலர் ந.திருலிங்கநாதன், சேவாலங்கா நிறுவனத் தலைவர் கலாநிதி ஹர் சகுமாரநவரத்தின, அதன் திட்டப்பணிப்பாளரும் உப தலைவருமான லக்சி அபயசேகரா, அருட்திரு யேசுரட்ணம் அடிகளார், சிவஸ்ரீ கிருஷ்ணபவானந்தக் குருக்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.