Ad Widget

போர்க்குற்ற விசாரணைகள் 1983ம் வருடத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும்!- டக்ளஸ்

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் வேண்டும். அது சர்வதேச விசாரணையா?, உள்ளக விசாரணையா?, கலப்பு நீதிமன்ற விசாரணையா? என்பது தொடர்பில் தேவையற்ற விவாதங்களையும், கால இழுத்தடிப்புக்களையும் நாம் விரும்பவில்லை. விசாரணைப் பொறிமுறையானது, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கின்ற விதமாகவும் அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

சர்வ கட்சிகளின் கூட்டத்திற்கு அமைவாக ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் முன்வைக்கப்படுள்ள பரிந்துரைகளில் இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், விசாரனைகள், உண்மைகளைக் கண்டறிவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, பரிகாரங்கள் கிடைப்பதற்கு ஏதுவாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, விசாரணைகள 1983ம் வருடத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இது, பாரபட்சமற்றதாகவும், அரசியல் பழிவாங்கல்களுக்கு இடமளிக்காத வகையிலும் அமைய வேண்டும்.

போர்க்குற்ற விசாரணையானது போரை நடத்தியவர்கள், போரை வரவேற்றவர்கள், போருக்கு அறைகூவல் விடுத்து மக்களை அழிவுகள் நோக்கி தூண்டிவிட்டவர்கள், இளைஞர், யுவதிகளை போருக்கு ஆட்சேர்ப்புச் செய்தவர்கள் என்போரை சட்டத்தின் முன் நிறுத்துவதாக அமைய வேண்டும்.

யுத்த நிறுத்த காலங்களை புலிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியமையால் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ் ஒப்பந்தத்தில் இருந்த குறைபாடுகள் என்ன? அதை எவ்வாறு புலிகள் சாதகமாகப் பயன்படுத்தினார்கள் என்றும் ஆராய வேண்டும். இக் காலகட்டத்தில் எமது உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளார்கள்.

உள்ளக விசாரணை பொறிமுறையில் வெளியாரின் பங்களிப்பின் மூலமே நீதியான விசாரணை நடைபெறும் என்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவகையில், விசாரணை பொறிமுறைகள் நம்பிக்கை தருவதாக அமைவதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஆயுத போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் ஆராயப்பட்டு, பரிகாரத்திற்கான வழிமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த விசாரணைகள் வழியேற்படுத்துவதாக அமைய வேண்டும் எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts