Ad Widget

போர்க்குற்றவாளிகளுக்கு உள்நாட்டு சட்டக்கட்டமைப்பின் கீழ் தண்டனை!

இறுதிக்கட்டச் சமரின்போது போர்விதிகளை மீறிய படையினருக்கு எதிராக உள்ளக சட்டக்கட்டமைப்பின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இறுதிப்போரின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மேற்படி ஆணைக்குழு, தனது இறுதி விசாரணை அறிக்கையை கடந்த ஓகஸ்டில் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது.

இந்த அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், அறிக்கை இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர் அறிக்கை தொடர்பில் சபையில் விவாதம் நடத்தப்படும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதனுடன் இணைந்ததாக மெக்ஸ்வெல் ஆணைக்குழுவின் அறிக்கையும், உடலாகம ஆணைக்குழுவின் அறிக்கையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் சூழ்நிலையே காணப்படுகிறது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை அரச தரப்பிலிருந்து கொண்டுவரப்படவுள்ளது.

அதேவேளை, பரணகம ஆணைக்குழு அறிக்கையில், உள்ளக விசாரணைக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்ற யோசனையும் அதில் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகிறது.

அத்துடன், மேலும் பல சிபாரிசுகளும் இடம்பெற்றுள்ளன.

போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை தனது ஆட்சியின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்திருந்தார்.

காலப்போக்கில், இறுதிப்போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தும்வகையில் அதன் விடயப்பரப்பை மஹிந்த ராஜபக்‌ஷ விஸ்தரித்தார்.

இதற்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன் டி சில்வா தலைமையில் சர்வதேச ஆலோசனைக்குழுவொன்றையும் அவர் அமைத்தார்.

ஆட்சிமாற்றத்தின் பின்பும் பணிகளைத் தொடர்வதற்குப் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரணகம ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கினார்.

முதலாவது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் காணாமற்போனோர் தொடர்பில் அவர்களின் உறவினர்களிடம் சாட்சியங்கள் திரட்டப்பட்டன. அவை தொடர்பான விசாரணைகள் இன்னும் முழுமையடையவில்லை. எனினும், இடைக்கால விசாரணை அறிக்கையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் போர் விதிமீறல்கள், மனிதாபிமான சட்டதிட்டங்கள் மீறப்பட்டமை பற்றி விசாரிக்கப்பட்டது. விசாரணைகளுக்காக உயர்படை அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான இறுதி அறிக்கையிலேயே உள்ள சட்டக்கட்டமைப்பின்படி நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts