Ad Widget

போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! – சுமந்திரன்

போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், நவம்பர் மாதத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உலக வழக்கமாக இருந்து வருவதன் அடிப்படையில் போரினாலோ அதன் தாக்கத்தினாலோ உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை யாவருக்கும் உண்டு. வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர் மூலம் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. இதனால் உறவுகளுக்கு அஞ்சி செலுத்துவதற்குக் கூட அங்குள்ள மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் மாதத்திலேயே உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டே பொப்பி மலர் அணியும் வழக்கமும் வந்தது. அந்தவகையில் தான் நானும் பொப்பி மலர் அணிந்து வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தேன். இதன்மூலம் ஒவ்வொரு போராளி அல்லது வீரரும் நினைவு கூரப்பட வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்றல்லாது நினைவுகூரல் என்பது சகலருக்கும் சமனானதாக இருக்க வேண்டும்.

நான் ஆழியவளை மற்றும் உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன அவ்விடங்கள் தற்போது தென்னந்தோப்புகளாக மாறியுள்ளன. நவம்பர் மாதத்தில் இறந்த ஆத்மாக்கள் நினைவு கூரப்படுகின்ற நிலையில் மேற்படி ஆழியவளை மற்றும் உடுத்துறை பிரதேசங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு தமது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை இல்லாது செய்யப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தினால் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம். எம்மைப் பொறுத்தவரையில் நாம் ஆயுதங்களை ஏந்தவில்லை. பிரிவினையையும் கோரவில்லை. மாறாக இறந்துபோன உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறே கேட்கின்றோம். யுத்தத்தின் போதும் யுத்த காரணங்களினாலும் மரணித்த உறவுகளுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுக்கிறேன் என்றார்.

Related Posts