Ad Widget

பொருத்தமான நேரத்தில் இலங்கை வருவேன்! – மைத்திரியின் அழைப்புக்கு இம்மானுவேல் பதில்

“உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது இலங்கைக்கு வருவேன்.” – இவ்வாறு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், இன்று திங்கட்கிழமை வெளிவந்துள்ள தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Global Tamil Forum -emanuvel-vel0imanu

“இலங்கைக்கு வருகைதர முன்பாக என்னைப் பற்றியும் எமது செயற்பாடுகள் பற்றியும் முன்னைய மஹிந்த அரசினால் புனையப்பட்ட பொய்கட்டுக் கதைகளும் அவதூறுச் செய்திப் பரப்புதல்களும் எப்படியாகக் களையப்படப்போகின்றது என்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றேன்” – என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை உலகத் தமிழர் பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலிடம் மின்னஞ்சல் மூலமாக குறித்த பத்திரிக்கை வினவியுள்ளபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்தப் பதிலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினர் பிரிட்டனுக்கு வந்திருந்தபோது உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த மேலும் மூன்று அங்கத்தவர்களுடன் நாம் அவருடன் காலை உணவு விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தோம்.

இதில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சர் சுவாமிநாதனும் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உலகத் தமிழர் பேரவை பணியாற்றியிருந்தது என்ற அடிப்படையில் புதிய இலக்குகளை நோக்கிய பயணத்தில் நாம் புதிய அரசுக்கு உதவுவதற்கு விரும்பினோம்.

இனப்பிரச்சினை மற்றும் போர் தொடர்பான முற்றுமுழுதான உண்மைகளை அறிந்துகொள்ளும் பட்சத்திலும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை இதயசுத்தியுடன் அர்ப்பணிப்புடன் அடைவதற்கு முயற்சிக்கும் பட்சத்திலுமே நல்லிணக்கத்தைக் காண்பது சாத்தியமாகும் என்பதை இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் நான் வலியுறுத்தியிருந்தேன்.

உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான எமது தேடலின் விளைவே நல்லிணக்கமாகும். இந்தத் தேடலை அரசியல்வாதிகளால் மாத்திரம் முன்னெடுக்கமுடியாது.

இந்த விடயத்தில் மதங்களும் அதன் தலைவர்களும் முக்கியமானதும் பொறுப்புவாய்ந்ததுமான பணியை ஆற்றவேண்டியிருக்கின்றது. 1956ஆம் ஆண்டு முதற்கொண்டு பாதிக்கப்பட்டவர் என்ற வகையிலும், சாட்சியென்ற வகையிலும் எனக்கு இந்த இனப்பிரச்சினையுடன் நீண்டகால அனுபவம் இருக்கின்றது.

நான் மீண்டும் தாயகம் திரும்புமிடத்து இந்த அனுபவத்தினூடாக உதவமுடியுமாக இருக்கும். ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் ஏனையவர்களும் இந்தச் சந்திப்பின்போது இதனைப் புரிந்துகொண்டதுடன் நான் இலங்கைக்குத் திரும்பிவந்து உதவமுடியும் என விரும்பினார்கள்.

என்னைப் பற்றியும் எனது நடவடிக்கைகளைப் பற்றியும் முன்னைய மஹிந்த அரசானது பரப்பிய முற்றுமுழுதான பொய்களும் அவதூறுச் செய்திகளும் எந்தவகையில் களையப்படப் போகின்றது என்பதையும் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் இனிமேல்தான் பார்க்கவேண்டியிருக்கின்றது.

அந்தவகையில் உடனடியாகவன்றி, உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது சில காலப்பகுதியின் பின்னர் நான் இலங்கைக்கு வருவேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts