பொதுநலவாயத்தில் முதலமைச்சர் பங்கேற்ககூடாது:த.தே.கூ.

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

tna

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று யாழ். பொது நூலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், அந்த துறை சார்ந்த அவர்களது பொறுப்புக்கள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போதே, பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பதில்லையென்பதுடன் இந்த மாநாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.