பேய்கள் ஆடும் கரகத்தில் தாடிச்சாத்தானும் குட்டிச்சாத்தான்களும் பாடுகின்றன: சிறிதரன்

பேய்கள் ஆடும் கரகத்தில் சாத்தான்கள் பாட்டு பாடுகின்றன. தாடியோடு ஒரு சாத்தானும் அதனோடு சேர்ந்து குட்டிச்சாத்தான்களும் பேய்களுக்காக பாட்டுப்பாடுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார்.

Sritharan

தமிழசுரக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையின் மாவட்ட மாநாடு, நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘தமிழர்களுக்கு தீர்வு தமிழீழம் என 1976ஆம் ஆண்டில் தந்தை செல்வா கூறினார். இன்று அவர் உயிருடன் இல்லை. அதையே பிரபாகரன் சொன்னார். ஆனால் அவர் இன்று களத்தில் இல்லை. ஆனாலும் நாம் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் தான், ஜனாதிபதி முறைமையை கைவிடுவதாக கூறிச்சென்றார். ஆனால், நாம் இங்கு ஜனாதிபதி முறைமை பற்றி பேசவில்லை.

எங்களது பிரச்சினையை இனவாத பிரச்சினையாக சித்தரித்தாலே சிங்கள தலைமைகளால் வெற்றி பெற முடியும். எனவே, அவர்கள் எமது பிரச்சினையை தீர்த்து வைக்கப்போவதில்லை.

1989க்கு பின்னர், உலக வரைபடத்தில் 23 தனிநாடுகள் உருவாகியுள்ளன. தற்பொழுது சர்வதேசம், குருத்தீஸ் என்ற நாட்டுக்கு விடுதலை தர இருக்கின்றது. ஆனால், அவர்கள் அதை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதேபோன்ற நிலை தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடாது.

நாங்கள் இலங்கையை பிரிக்கச் சொல்லி கேட்கவில்லை. ஆயுதம் தாங்கி போராடும் படி யாரையும் கோரவில்லை. தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வை முன்வையுங்கள். எமக்கு ஒரு அரசியல் தீர்வு தேவை என்றே போராடுகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானிடம் எப்படி பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பது என்று முன்னொருமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டார். ஆனால் இன்று வடக்கில் விக்னேஸ்வரனிடம் எப்படி பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பது என அவரால் கேட்க முடியாது. நாங்கள் மற்றவர்களுக்கு படம் காட்டுவதற்கு விக்னேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வரவில்லை.

அரசாங்கம் எம்மை பலவீனப்படுத்த முயல்கிறது. அதற்கு சாத்தானும் அதனுடன் இணைந்த குட்டிகளும் துணைபோகின்றன. எங்கள் பெண்களை நிர்வாணமாகப் பார்த்து சிரித்தவர்கள், இன்று புகையிரத நிலையத்தை திறந்து வைக்கிறார்கள். மோட்டார் சைக்கிள் கொடுக்கிறார்கள். அவற்றைப் பெற்று நாம் போலி வாழ்க்கை வாழக்கூடாது.

அரசாங்கத்தின் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இயங்கி எங்கள் இனத்தை அழிக்க போகிறீர்களா? அல்லது தமிழினத்திற்கு ஒரு அரசியல் தீர்வு தேவை என போராடி அரசியல் தீர்வை பெறப்போகிறீர்களா? என யோசிக்க வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார்.