பெண்கள் மீதான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் கடந்த வாரம் யாழில் ஒரு பெண் படுகொலையான சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

937243074prot

யாழ் கண்டி நெடுஞ்சாலையில் யாழ் வளைவுக்கு அருகில் நேற்று மாலை 4 மணியளவில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினை சேர்ந்தவர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 17 ம் திகதி வியாழக்கிழமை நாச்சிமார் கோவில் தேர்முட்டியினுள் இருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் அரியாலை நெடுங்குளத்தை சேர்ந்த மார்க்கண்டு லோகராணி (வயது 45) என்பவராவார்.

குறித்த பெண்ணின் படுகொலை சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பில் பல சந்தேகங்கள் உண்டு. இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பலாத்காரத்திற்கு பின்னரே கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என சந்தேகிகின்றோம்

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்.

அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற கூடாது என தெரிவித்தனர்.