புலிகள் மீளவும் ஒருங்கிணையும் சந்தர்ப்பம் இல்லை – ஐங்கரநேசன்

ainkaranesanவிடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையும் சந்தர்ப்பம் ஒருபோதும் இல்லையென்பது எல்லோருக்கும் தெரியுமென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

‘ஊசல்’ கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா யாழ். நாவலர் வீதியிலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நேற்றயதினம் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘வட்டுக்கோட்டைப் பகுதியில் சனிக்கிழமை 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் 02 விளையாட்டு மைதானங்களுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பில் எமக்கு தொலைபேசியில் தகவல் கிடைத்த நிலையில், நானும் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்டோரும் அங்கு சென்றோம். இதன்போது, இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் கேட்டபோது, ‘அண்மையில் கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நடந்த அசம்பாவிதத்துடன் தொடர்புடைய நபர் இங்கு வந்து போயுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினர்’

அந்த வகையில் இங்கு நடப்பது எம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருக்கின்றோம்.

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயக்குமாரி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தானும் தனது தாயாரும் அங்குள்ளவர்களினால் தலைமயிரில் பிடித்து கன்னங்களில் அறைந்து, சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தான் இப்போது பூப்படைந்துள்ளதால் தனது தாயை விடுதலை செய்யுமாறும் கூறியுள்ளார். இது அரசு வசனம் எழுதி, அரசே இயக்கி நடிக்கும் ஒரு நாடகம். அதில் நடிகர்களாக அரசின் புனர்வாழ்வு முகாம்களிலிருக்கும் முன்னாள் போராளிகள் சிலர் விரும்பியும் விரும்பாமலும் நடிக்கக்கூடும்.

ஜெனீவாவில் அரசுக்கு ஏற்படப்போகும் தாக்கங்களை உணர்ந்து, இந்த அரசு இவ்வாறான புலிப்பூச்சாண்டியை காண்பிப்பதற்கு முயற்சிக்கிறது. ஆனால், இங்கு பாதிக்கப்படப் போகிறவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ள எமது உறவுகள் தான்.

தாங்கள் எந்நேரமும் கைதுசெய்யப்படலாமென்று முன்னாள் போராளிகள் அஞ்சுகின்றனர். இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது, கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் கடமைமையென்று நினைக்கிறேன்.

ஆசிரியரின் எலும்புக்கூடு எடுக்கப்பட்டதற்காக அந்த ஆசிரியரிக்கு என்ன நடந்தென்று கேட்டு போராடுவதற்கு ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர்.

இந்த ‘ஊசல்’ போன்று நாங்களும் இந்த நிலைப்பாடின்றி இருக்கும் எமது உறவுகள் இப்பக்கம் சாய்வதா, இல்லை அப்பக்கம் சாய்வதா என்று தெரியாமல் இருக்கின்றனர்.

புதுவை இரத்தினம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றதற்கு அப்பால், அவர் எமது கவிஞர் அல்லது படைப்பாளியென எமது படைப்பாளிகள் எவரும் குரல் கொடுக்க வரவில்லை. அவர் எங்கேயென்று யாரும் குரல் எடுக்கவில்லை. அந்த வகையில், புதுவை இரத்தினம் மழுங்கடிக்கப்பட்டு விட்டார்.

எந்த அமைப்பு எந்த இயக்கம் என்ற எண்ணமின்றி அனைவரும் படைப்பாளிகள் என்ற வகையில் எல்லோருக்கும் குரல் கொடுக்க வேண்டும். படைப்பாளிகளுக்கு அப்பால் மிக இக்கட்டான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கக்கூடிய இக்கால கட்டத்தில் எமது முன்னாள் போராளிகள் மீண்டும் சிறைக்கு செல்லாதிருக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்’ என்றார்.

Related Posts