புலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி

புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து, நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் என்றும், இவர்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில், நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“டயஸ்போரா என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. ஒவ்வொரு நாடுகளிலும் இவர்கள் வேவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனினும், இலங்கையர்களாகிய நாம் தான் இந்த டயஸ்போரா எனும் வசனத்தைக் கேட்டு தற்போது குழம்பிக்கொண்டிருக்கிறோம்.

புலம்பெயர்ந்தோர் என்போர் தமது நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் வாழும் ஒரு குழுவினர்களாவர். இவர்களில் நல்லவர்கள் – தீயவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர்.

நாம், இவர்களின் செயற்பாடுகளில் எதனை எமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும்.

கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நேர்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தக் குழுவினர், அங்கு மிகுந்த செல்வந்தர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களிலிருந்து எமக்கு நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் முன்னேற்றத்துக்காக இவர்களிடமிருந்து எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையே நாம் முதலில் அடையாளம் காணவேண்டும்.” என கூறினார்.