பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை

முல்லைத்தீவு பிரதேச மாணவர்கள் பலர், பாடசாலைக் கல்வியைப் புறக்கணித்துவிட்டு வீடுகளிலும், வேலைத்தளங்களில் பணிபுரிந்துகொண்டும் இருப்பதாக தெரிவித்த மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்காத பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

school_children_sri_lanka

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகளை புதன்கிழமை (01) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், ‘பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். மாணவர்கள் கல்வி கற்பதற்கு வருமையை ஒரு காரணமாக காட்டக் கூடாது. இன்று எமது நாட்டில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு கல்வியை கற்பதற்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் அதுபற்றி எமக்கு தெரியப்படுத்துங்கள். உரிய அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி, முடியுமான உதவிகளை பெற்றுக்கொடுப்போம்’ என்றார்.

‘மாணவர் ஒருவர் பாடசாலைக்கு செல்லாமல் வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ, அதுபற்றி விசாரணை செய்யப்பட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.