யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்காக கடந்தவாரம் யாழ். பிரதம தபாலகத்தில் கையளிக்கப்பட்ட கடிதங்கள் பல மாயமாகியுள்ளன. இதனால் நேற்று திங்கட்கிழமை அவசர அவசரமாக நேரடியாக அழைப்புக் கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் யாழ். மாவட்ட செயலகத்தினால் தயாரிக்கப்பட்டன.
குறித்த அழைப்புக் கடிதங்கள், யாழ். மாவட்ட செயலக ஊழியர்களால், யாழ். பிரதம தபாலகத்தில் கடந்த 12 ஆம் திகதி கையளிக்கப்பட்டன. கையளிக்கப்பட்ட குறித்த கடிதத் தொகுதியில் ஒரு தொகுதிக் கடிதங்கள் உரியவர்களுக்கு கிடைக்கவில்லை.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்குரிய கடிதங்களே இவ்வாறு மாயமாகியுள்ளன. இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட பின்னரே கடிதம் கிடைக்காத விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இருப்பினும் சகல கடிதங்களும் யாழ். மாவட்ட செயலகத்தினால் யாழ். பிரதம தபாலகத்துக்கு கடந்த 12 ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கடிதங்கள் உரியவர்களுக்கு கிடைக்கவில்லை.இதனால் நேற்று திங்கட்கிழமை அவசர அவசரமாக நேரடியாக அழைப்புக் கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.