பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.- டக்ளஸ் கோரிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 27ம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘கடந்தகால அழிவு, யுத்தம் காரணமாக எமது மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டு மிகவும் பின்னடைவு கண்டிருந்தது. தற்போது அது படிப்படியாக சீர்செய்யப்பட்டு முன்னேறி வரும் நிலையில், அமைதிச் சூழலில் மேற்கொள்ளப்பட்டு வந்த யாழ்.பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை குழப்பும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனிமேலும் நடக்கக் கூடாது.

எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் நிலையில் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.

இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதும் தீர்க்கப்பட்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக்குவதும் அவற்றின் மூலம் அரசியல் இலாபம் தேடுவது இந்த சமூக நலன் விரோத சக்திகளின் தொடரும் செயற்பாடுகளாகி உள்ளன. இவ்வாறான விசமிகளின் தூண்டுதல்கள் காரணமாகவே யாழ்.பல்கலைக்கழகத்திலும் பதற்றநிலை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் அதுவும் எமது எதிர்கால சந்ததியினர் அறிவு பெறும் இடத்தில் இத்தகைய செயற்பாடுகளுக்கு தூண்டி எமது மக்களையும் எதிர்கால அறிவு ஜீவிகளையும் கருவறுத்துவரும் இவ்வாறான சமூக நலன் விரோத சக்திகள் தங்களுக்குரிய இடங்களில் தங்களது சொந்தங்களை வைத்து இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதில்லை’ என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webadmin