பார்த்தீனியச் செடிகள் அழிப்பினை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்

பார்த்தீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

IMG_1383 copy

‘படையெடுக்கும் பார்த்தீனியத்திற்கு விடை கொடுப்போம் வாரீர்’ என்ற தொனிப்பொருளில் பார்த்தீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நிலாவரைப் பகுதியிலிருந்து பார்த்தீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நவக்கிரி விவசாயப் பண்ணையில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

‘எமது பிரதேசங்களில் இராணுவம் எவ்வாறு விரும்பத்தகாத வகையில் பரவியிருக்கின்றதோ, அதேபோல் இந்தப் பார்த்தீனியச் செடிகளும் பரவியிருக்கின்றன. இது எமது நாட்டிற்கான சுதேச செடியில்லை என்பதுடன், இது இந்தியாவிலிருந்து எமது நாட்டிற்கு பரவியிருக்கின்றது.

நச்சுத்தன்மையுடைய இந்தச் செடிகள் 1987ஆம் ஆண்டு கோப்பாய் பிரதேசத்திலேயே முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடு மற்றும் கோதுமை தானியங்கள் மூலம் இது பரவப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளான வசாவிளான், குட்டியப்புலம், நெல்லியடி, கோப்பாய், ஈவினை, புன்னாலைக்கட்டுவான், தோட்டவெளி, வதிரி ஆகிய இடங்களிலேயே இந்தச் செடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இதனை இந்திய இராணுவம் வேண்டும் என்று பரப்பவில்லை.

வடமாகாண விவசாய அமைச்சினால் பார்த்தீனிய அழிப்பு நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 31ஆம் திகதிவரையும் மேற்கொள்ளப்படவுள்ளது. இருப்பினும் இந்தக்காலம் இந்தச் செடிகளை அழிப்பதற்கு போதுமானதாக இல்லை.

நச்சுச் செடிகளான இவற்றை கால்நடைகள் உண்ணாமையாலும் வருடத்திற்கு 04 தடவைகள் பூத்துப் பெருகுவதினாலும் இவை அதிகமாகப் பரவியிருக்கின்றன.

ஆகவே ஒவ்வொரு விவசாயத் திணைக்களங்களும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

தொடர்புடைய செய்தி

யாழ். குடாநாட்டில் மிகவும் வேகமாகப் பரவும் பாதீனியம்.