புதிய அரசியற்கட்சி ஒன்றை அரம்பிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றேன் என்று தெரிவித்த யாழ். மாநகர சபை சுகாதாரக் குழுத்தலைவர் சுதர்சிங் விஜயகாந்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இணைவதற்கு தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஈ.பி.டி.பி.யின் கட்சி உறுப்பினராக 14 வருடகாலமாக பணியாற்றி வந்திருந்தேன். ஆனால் அண்மையில் கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஈ.பி.டி.பி.யில் இணைந்து செயற்படுவற்குத் நான் தயாராக இல்லை.
தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே இருப்பதுடன், தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருக்கின்றேன்.
பல்வேறு கட்சிகளிடமிருந்து எனக்கு அழைப்புக்கள் வந்திருந்தபோதும், எந்தக் கட்சியிலும் இணைந்து கொள்வதற்கு எனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடத்தி வருகின்றேன். விரைவில் இது தொடர்பில் அறிவிப்பு விடுக்கவுள்ளதோடு, எதிர்வரும் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடவும் இருக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.