பஸ் மீது தேங்காய் வீசி தாக்குதல்

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது, மாங்குளம் சந்தியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை 2 மணியளவில் தேங்காய் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியிலிருந்து – திருகோணமலைக்கு சேவையில் ஈடுபடும் பஸ் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதி இருக்கையின் முன்பக்க கண்ணாடி மீதே இந்த தேங்காய் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிர்ஷ்டவசமாக சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான முல்லைத்தீவு ஊடாக திருகோணமலைக்கு சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்றின் மீது கடந்த 6ஆம் திகதி, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.