பஸ் தரிப்பிடங்களை அமைக்கும் தனியார்கள் இனிவரும் காலங்களில் வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா. டெனீஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறந்தவர்களின் நினைவாக அல்லது பொதுநோக்குடன் பஸ் தரிப்பிடங்கள் அமைக்க நினைப்பவர்கள், வடமாகாண போக்குவரத்து அமைச்சின் அனுமதியை பெற்ற பின்பே அமைக்க முடியும்.
மேலும், பஸ் தரிப்பிடங்களை அமைக்கும் தனிநபர்கள், சரியான திட்டமிடலை பின்பற்றுவதில்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து அமைச்சின் அனுமதி பெற்று அமைப்பதன் மூலம் இடத்தின் அமைவிடம், அளவு, வடிவமைப்பு என்பன சீரான முறையில் பேணப்படும் என அவர் குறிப்பிட்டார் .
அந்தவகையில், எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து அனுமதி பெற்று தரிப்பிடங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற நடைமுறை வடமாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.
அனுமதி பெறாமல் அமைக்கப்படும் தரிப்பிடங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.