பல்கலை மாணவியின் மரணத்தில் சந்தேகம்

சுன்னாகம் பகுதி வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகமிருப்பதனால் வயிற்றின் சிறுபகுதி கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.

நுண்கலை பீட மாணவி ஷியானியின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக நேற்றய தினம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் வயிற்றின் சிறுபகுதி ‘நஞ்சு ஆய்வியலுக்காக’ கொழும்பு தலைமை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.