பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் திட்டமிட்டு தாக்கியதை போல் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று(திங்கட்கிழமை) இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை இலக்கு வைத்து 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கியதாகவும் இச்சம்பவம் எதேச்சயாக நடைபெறவில்லை என்றும் இதை சிங்கள மாணவர்கள் திட்டமிட்டே செய்திருக்கிறார்கள் எனவும் சம்பவம் நடந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் இரு மாணவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ம் வருட தமிழ் மாணவர்கள் குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு தமது விடுதிக்கு திரும்பிச் செல்லும் பாதையில் வைத்து வழி மறித்த 2ம் வருட சிங்கள மாணவர்கள் பொல்லுகள் மற்றும் தலைக் கவசங்களினால் தமிழ் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இவ் தாக்குதலில் காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உடனடியாக ( 22.08.2016 திங்கள்) மாலை 7 மணியளவில் சக மாணவிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு பலத்த இரத்த காயங்கள் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மாணவர்கள் மீது யாழ்பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் அரங்கேற்றிய நாடகத்தின் தொடச்சியாக இதை பார்ப்பதாகவும் இது இலங்கையில் இருக்கும் பிரச்சினைகளை வலுப்படுத்தும் போக்காக காணப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Posts