பண்ணை பஸ் நிலையம் இடிப்பு!

யாழ். கோட்டையைச் சூழவுள்ள இடங்களை அழகுபடுத்தவுள்ளதாக தொல்லியல் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, யாழ். பண்ணை பகுதியில் அமைந்திருந்த யாழ் – கொழும்பு தனியார் பேரூந்து நிலையக் கட்டிடம் இடிக்கப்பட்டதாக யாழ். மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.

Koddai-bus-stand

மேற்படி கட்டிடம் கடந்த புதன்கிழமை இடிக்கப்பட்டது. இது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ். கோட்டையைச் சூழவுள்ள இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தொல்லியல் திணைக்களம் அழகுபடுத்தவுள்ளது. இந்த நிலையில், கோட்டைக்கு பின்புறமாகவிருந்த மேற்படி பேரூந்து நிலையக் கட்டிடத்தை அப்புறப்படுத்துவதற்கு ஆவண செய்யுமாறு யாழ். மாநகரசபையிடம் தொல்லியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கமைய மேற்படி கட்டிடம் இடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேற்படி கட்டிடம் இடிக்கப்பட்டபோதிலும், பேரூந்துகள் அவ்விடத்திலிருந்து புறப்படுமெனக் கூறிய அவர், விரைவில் மேற்படி பேரூந்து நிலையத்துக்கான நிரந்தர இடம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மேற்படி கட்டிடத்தின் கூரைகள் 2012ஆம் ஆண்டு வீசிய காற்றினால் தூக்கி எறியப்பட்டு, இதுவரை காலமும் கூரையின்றியே காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.