பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அழைக்கவில்லை: அமைச்சர் ஜோன் செனவிரத்ன

resisterபட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக அவர்களை நாம் கொழும்புக்கு அழைக்கவில்லை என்று அமைச்சர் ஜோன் செனவிரத்ன இன்று தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் அவர்களை கொழும்பு சுகததாஸ வெளியரங்கிற்கு அழைக்கவில்லை.
பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை தபால் ஊடாக இன்றைக்கு வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். எனினும் இந்த வருடத்திற்குள் சகல பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையிலேயே பட்டதாரிகள் சங்கத்தினால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேடையில் வைத்து சம்பிரதாயபூர்வமாக தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களை பிரதிநித்துவப்படுத்தி மூவருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 2004ஆம் ஆண்டும் இதேபோன்றதொரு கௌரவிப்பு நிகழ்வை நடத்தினார்.

மக்கள் விடுதலை முன்னணி கூறுவதைப்போல பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஏமாற்று நடவடிக்கை அல்ல என்றும் 52 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் ஒரு வருடத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

நாடளாவிய ரீதியிலுள்ள 52 பட்டதாரிகளும் கடந்த 12ஆம் திகதி கொழும்பு சுகததாஸ வெளியரங்கிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts